Sunday, September 13, 2015

கருட யாத்திரை - 6

திருக்கண்ணங்குடி நியம கருடன்


உபயநாச்சியார்களுடன் லோகநாதப்பெருமாள் 






நமது தமிழகமெங்கும்  கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் "பஞ்ச கிருஷ்ண தலங்கள்" என்ற சிறப்புப் பெற்றவை



இராஜகோபுரம் 

உட்புறம் 

இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான  திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன்  ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக   சேவை சாதிக்கின்றார்.

இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்  
     1. தெற்கில்             -   ஆபரணதாரி என்ற பதியில்  ஆனந்த நாராயணன்
     2.
தென்மேற்கில்    -   பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
     3.
தென்மேற்கில்    -   தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
     4.
தென்மேற்கில்    -   கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
 

ந்த ஐந்து தலங்களும் சுமார் 6 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன.   வாருங்கள்   திருமங்கை மன்னரின் தீரா வழக்கு ஒன்று உள்ள இந்த திவ்ய தேசத்தை சேவிக்கலாம். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இத்தலம்  பஞ்ச பத்ரா என்று புகழ் பெற்றது.


கருடன் சன்னதி

ஆழ்வார் ஆச்சாரியர்கள் சன்னதி 

மூலவர்: லோகநாதப் பெருமாள். சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.
உற்சவர் : தாமோதர நாராயணன்.
தாயார்: லோகநாயகி  அரவிந்தநாயகி  தாயார்.
விமானம்: உத்பலாவதக  விமானம்
தல விருட்சம்: மகிழம்
தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம்.


தாயார் சன்னதி

தல வரலாறு: கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்ட வசிஷ்ட முனிவர் அந்த கண்ணனுக்கு மிகவும் பிரியமான  வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள்  அவரது  பக்தியை உலகத்தினத்தினர்களுக்கு உணர்த்த   கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்து கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர்.  தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான், சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள், வசிஷ்டர் துரத்திக் கொண்டு வருகிறார். அவர்களோ, "கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்”. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது. இராமருக்கு ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு தனி சன்னதி உள்ளது. 
உத்பாலகவதக விமானம் 

இங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸ், கௌதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆச்சார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர்.


பின்புற இராஜகோபுரம்


சிரவண புஷ்கரிணி

திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே ஜாடையில் சேவை சாதிக்கின்றனர். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இங்கே உற்சவர் இரு கைகளையும் கட்டிக் கொண்டு நியம கருடனாக வைகுண்டத்தில் உள்ளது போல உற்சவர் கருவறையில் தாமோதரப் பெருமாளுடன்  சேவை சாதிக்கின்றார்.  மூலவர் கருடன்  சிறிதாக பெருமாளுக்கு எதிராக அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார். 


இராமர் சன்னதி 

இந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக "காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி'' என்பார்கள். அது என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளாதா? வாருங்கள் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் செய்த லீலைகளைக் காணலாம். 




உறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது "நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை வந்து  அச்சிலையைக் கண்டு, உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும், வேண்டுமோ என்று அறம் பாடியவுடன் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் முழுவதும் அவர் கையில் வந்து விழுந்ததாம். இதோ அப்பாடல்
ஈயத்தாலாகாதோ இரும்பினாலாகோதோ
     பூயத்தால் மிக்கதொரு பூதத்தலாகாதோ
பித்தளை நற்செம்புக லாகாதோ
     மாய்ப்பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே.
அந்தப் பொன்னை  எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து "நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து "உறங்காப்புளி வாழ்க' என்றாராம். இப்போதும் சிறு மேடாக உறங்காப்புளி இருந்த இடத்தைக் காணலாம்.


கருட வாகனம்

தீரா வழக்கு!:  பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை எழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, "எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. ஆனால் திருவரங்கம் சென்ற ஆழ்வார் திரும்பி வரவேயில்லை. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்று வரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீராத வழக்காகவே (தோலா வழக்காகவே), இருந்து வருகின்றதாம்.

பாசுரம் சேவிக்கின்றோம் 

ஊறாக்கிணறு!: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், "இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்பு  நீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.



காயா மகிழ்!: பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து "நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயாமகிழ மரமாக இருப்பாய்' என்றார்.

இவ்வாறு இந்தத் தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார். திருமங்கையாழ்வார் இப்பெருமாளை 10 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் திருநீறணி விழாஎன்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம்.

இத்தலத்தில்  சென்று  பெருமாளை வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்




சிறு கிராமத்துக்கோயில் என்பதால் கூட்டம் இருக்கவில்லை. அடியோங்கள்  அதிகாலையிலேயே சென்று விட்டோம், பட்டர் திருவாராதனத்திற்கு பால் வரவில்லை என்று காத்துக்கொண்டிருந்தார். அடியோங்களும் அவருடன் காத்துக்கொண்டிருந்தோம், பாசுரம் சேவித்தோம், புகைப்படங்கள் எடுத்தோம். 
மேளே கூறியுள்ள்படி சேவித்தோம். பின்னர் பெருமாள், தாயார், நியமகருடனை  சேவித்தோம். பின்னர் திருநாகைக்கு கிளம்பி சென்றோம். 

No comments: